செய்திகள்

மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் கடும் நெருக்கடி- முத்தரசன்

Published On 2019-05-17 09:58 GMT   |   Update On 2019-05-17 09:58 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் மிக தவறான பொருளாதார கொள்கையால் நாடு முன் எப்போதுமில்லாத வகையில் கடும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகளின் ஆதரவுள்ள திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் மிக தவறான பொருளாதார கொள்கையால் நாடு முன் எப்போதுமில்லாத வகையில் கடும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டது. நாட்டின் தற்சார்பு தொழில்கள் அழிந்து வருகிறது. நாடு கடந்த நிறுவனங்கள் நாட்டை சூறையாட, கதவுகள் திறந்து விடப்படுகிறது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் மற்றும் நமது சிறப்பிற்குரிய பன்முகம் கேள்விக்குறியாகிவிட்டது.

இத்தகைய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் அப்பட்டமாக துணைபோகும் அரசாக எடப்பாடி அரசு செயல்படுகிறது.

காவிரி நீர், மீத்தேன், ஹேல்கேஸ் திட்டம், ஸ்டெர்லைட், சேலம் எட்டுவழிச்சாலை என தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கை நிலைகளையும், நிர்வாக முறைகளையும் தமிழக அரசு ஆதரிக்கின்றது.

தமிழ்நாட்டின் ஆட்சி உரிமைகளிலும், நிர்வாக செயல்பாடுகளிலும், ஆளுநரின் தலையீடுகள் மவுனமாக வரவேற்கப்படுகிறது. எதிர்கட்சிகள், எதிர் கருத்துகளை கூறினால் பல்வேறு முனைகளில் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடே, தமிழக அரசின் நிர்வாக திறன் இன்மையை படம் பிடித்துக்காட்டுகிறது.

எனவே தமிழகத்தின் ஜனநாயக மாண்புகளையும், உரிமைகளையும் காத்திட, மக்கள் விரோத அரசை வீழ்த்திட தமிழக மக்கள் நல்லதோர் தீர்ப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News