செய்திகள்

தேனி தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் குவிப்புக்கு இளங்கோவன் கண்டனம்

Published On 2019-05-16 08:39 GMT   |   Update On 2019-05-16 08:39 GMT
தேனி தொகுதிக்கு திருவள்ளூரில் இருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை.

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி அறிவிப்பதற்கு முன்பே ரகசியமாக கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு எந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகுதான் 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்போவதாக சொன்னார்கள்.

அப்படியே பார்த்தாலும் இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு 50 எந்திரங்கள் எதற்கு?

இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து மேலும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 விவிபாட் எந்திரங்களையும் கொண்டு சென்றுள்ளார்கள். இவ்வளவு எந்திரங்களை தேனியில் கொண்டு குவிப்பதற்கு என்ன காரணம்?

இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ, சதிசெயல் செய்ய திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்தல் ஒழுங்காக நடந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் எப்படியாவது தில்லுமுல்லு நடத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் அவர் மிகப் பெரிய தோல்வி அடைவார். மக்கள் மத்தியில் கடுமையான கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. தேனி தொகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எங்கள் புகாரை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News