செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம்

Published On 2019-05-13 07:42 GMT   |   Update On 2019-05-13 07:55 GMT
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம்:

தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நேற்றிரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.

இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்த அவர், இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பட்டாச்சாரியார்கள் சந்திரசேகர ராவ்க்கு பிரசாதம் வழங்கினர்.

இதையடுத்து அவர் பேட்டரி கார் மூலம், கோவில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் சென்றனர்.

பேட்டரி காரில் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலை வலம் வந்த காட்சி.

சுவாமி தரிசனம் முடிந்ததும் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

சந்திரசேகரராவ் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோவில், அவர் தங்கியிருந்த சங்கம் ஓட்டல், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அவர் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News