செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையை அரசுடைமையாக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2019-05-10 22:49 GMT   |   Update On 2019-05-10 22:49 GMT
தனியார் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமையாக்கி தமிழக அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் தனியார் நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து விவசாயிகளின் பெயர்களில் ரூ.450 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையிலான இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் இனியும் பழைய நிர்வாகத்தில் இயங்குவது சரியல்ல. அது மேலும் மேலும் ஊழல்களும், மோசடிகளும் நடப்பதற்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே அந்த தனியார் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமையாக்கி தமிழக அரசே நடத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட அனைத்து கடன்களையும் ஆலை உரிமையாளரின் பெயருக்கு மாற்றி, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும். இந்த மோசடியில் வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News