செய்திகள்

ஒகேனக்கல் அருகே வாலிபர் சுட்டுக்கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2019-05-09 17:53 GMT   |   Update On 2019-05-09 17:53 GMT
ஒகேனக்கல் அருகே வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது தப்பியோட முயன்ற தொழிலாளி தவறி விழுந்து காயமடைந்தார். #HogenakkalMurder
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஜருகு அருகே உள்ள குரும்பட்டியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 27). மெக்கானிக். இவர் கடந்த 1-ந்தேதி தனது அக்காவின் மகளான 15 வயது சிறுமியுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றார். அங்கிருந்து திரும்பியபோது பண்ணப்பட்டி என்ற இடத்தில் வனப்பகுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் முனுசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி செல்வம் (40) என்பவரை 2 நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர். வேட்டைக்காரரான செல்வம் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டது விசாரணையில் தெரியவந்தது. அவனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக டீக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வம் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். அவரை போலீசார் துரத்தி சென்றபோது தவறி விழுந்த செல்வத்திற்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த செல்வத்திற்கு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பென்னாகரம் மாஜிஸ்திரேட்டு கலைவாணி விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து உரிய சிகிச்சைக்கு பின் செல்வத்தை சிறையில் அடைக்க உத்தர விடப்பட்டது. வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான செல்வம் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றபோது காலில் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News