செய்திகள்

ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு

Published On 2019-05-09 13:04 GMT   |   Update On 2019-05-09 13:04 GMT
ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 5½ பவுன் செயினை பறித்து சென்றனர்.

ராஜாக்கமங்கலம்:

ஈத்தாமொழியை அடுத்த வடக்குசூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி கதிரேசன் (வயது42).

நேற்று மாலை செல்வி கதிரேசன் வீட்டின் அருகில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வத்தக்கா விளை அருகே வந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் செல்வி கதிரேசன் அருகே வந்த போது அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் செல்வி கதிரேசனின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் அவரது கையை தட்டி விட்டு கழுத்தில் கிடந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். செல்விக் கூறிய அடையாளங்களை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் ஏதாவது உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கருங்கல் உதய மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி தங்கலீலா (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து தேவிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து அவர் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தானிவிளை அருகே வரும் போது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்கலீலா அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கசெயினை பறிக்க முயன்றனர்.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு அலறினார். இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News