செய்திகள்

சாக்குமூட்டையில் உடல் - லாரி டிரைவரை மனைவியே கொலை செய்தது அம்பலம்

Published On 2019-05-07 11:46 GMT   |   Update On 2019-05-07 11:46 GMT
முதலியார்பேட்டையில் லாரி டிரைவரை மனைவியே கொலை செய்து சாக்குமூட்டையில் எடுத்து பிணத்தை சாக்கடை கால்வாயில் வீசியது அம்பலமாகி உள்ளது.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை 100 அடி சாலை போக்குவரத்து துறை அலுவலகம் அருகே நேற்று சாக்கடை கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

சாக்குமூட்டையில் கட்டி அந்த பிணத்தை சாக்கடையில் வீசி இருந்தனர். முதலியார்பேட்டை போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. கழுத்து எலும்பும் முறிந்து இருந்தது. அவரை யார்? யார் கொலை செய்தார்கள்? என்ற விவரங்கள் தெரியாமல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் படத்துடன் மாலை மலரில் செய்தி வெளியாகி இருந்தது. நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் உள்ள ஆஸ்பத்திரி முன்பு மயில் (வயது 46) என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். தற்செயலாக பத்திரிகையை செய்தியை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

படத்தில் இருப்பது அவரது மருமகன் கமலக்கண்ணன் போல தெரிந்தது. எனவே தனது மகளிடம் அதுபற்றி விசாரித்தார். அவர் கணவரை காணவில்லை என்று கூறினார்.

இதனால் முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் போலீசாரிடம் விவரத்தை கூறினார். போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பிணத்தை காட்டினார்கள். அப்போது இறந்தவர் கமலகண்ணன் என்பது உறுதியானது.

அவரை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது. இதையடுத்து சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

கமலகண்ணனின் வீடு நெல்லித்தோப்பு கஸ்தூரி பாய் நகர் வினோபா வீதியில் உள்ளது. இவருடைய மனைவி ஸ்டெல்லா (31). இவர்களுக்கு தர்ஷினி, தனுஷ்கா, தனுஷ்வரன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். கமல கண்ணன் லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

கணவர் இறந்தது குறித்து ஸ்டெல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் கதறி அழுதபடி பிண அறைக்கு வந்தார். அங்கு அழுது புறண்டார். சிறிது நேரம் கழித்து போலீசார் விசாரித்தனர்.

இவ்வளவு நேரமும் கணவரை ஏன் தேடவில்லை என்று போலீசார் அவரிடம் கேட்டனர். அதற்கு நான் எனது அக்காள் வீட்டிற்கு சென்றிருந்தேன் என்று கூறினார். மேலும் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினார்.

அடிக்கடி மயங்கி விழுந்தார். இது உண்மையான மயக்கம்போல தெரியவில்லை. எனவே போலீசாருக்கு அவர் மீது கடுமையாக சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் போலீசார் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது வீட்டு படிக்கட்டில் ரத்த கரைகள் இருந்தன. எனவே வீட்டில் வைத்து கொலை நடந்திருக்கிறது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

அதன்பிறகு கிடுக்கிப்பிடி போட்டு ஸ்டெல்லாவிடம் விசாரணை நடத்தியபோது, நான் தான் அவரை கொலை செய்தேன் என்று கூறினார்.

லாரி டிரைவரான கமலகண்ணன் சரியாக வேலைக்கு செல்வது இல்லை. வீட்டு செலவுக்கு பணமும் கொடுப்பது இல்லை. இதனால் கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு.

நேற்று முன்தினம் இரவும் இதேபோல தகராறு ஏற்பட்டுள்ளது. கமலகண்ணன் அப்போது குடிபோதையில் இருந்தார். அவர் ஸ்டெல்லாவை தாக்கினார். பதிலுக்கு ஸ்டெல்லாவும் தாக்கினார். இதில் கமலகண்ணன் தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது ஆத்திரத்தில் இருந்த ஸ்டெல்லா, கமல கண்ணனை சரமாரியாக காலால் மித்தார். இதில் அவர் இறந்துவிட்டார்.இதுபற்றி பிள்ளைச்சாவடியில் உள்ள தனது அக்காள் ஜெரினாவுக்கு தெரிவித்தார்.

ஜெரினாவுக்கு அனிதா நகரை சேர்ந்த தமிழ்மணி என்பவர் குடும்ப நண்பராக உள்ளார். இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே இருக்கிறார். அவருக்கு ஜெரினா போன் செய்து தங்கை வீட்டில் நடந்த சம்பவம் பற்றி கூறினார்.

எனவே தமிழ்மணி, ஸ்டெல்லாவின் வீட்டிற்கு வந்தார். இறந்து கிடந்த கமலகண்ணன் உடலை எங்காவது வீசி விடலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக பிணத்தை இழுத்து வந்து சாக்குமூட்டைக்குள் திணித்தார்கள்.

இழுத்து வரும்போது படிக்கட்டில் கால் உரசி அதில் ரத்தம் கொட்டியது. சாக்கு மூட்டைக்குள் உடலை அமுக்கியபோது தலை சரியாக உள்ளே அடங்க வில்லை. எனவே தலையை திருக்கி உள்ளே திணித்தனர்.

அதன்பின்னர் அதிகாலை நேரத்தில் தமிழ்மணி பிணத்தை எடுத்து வந்து சாக்கடையில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அவர் அந்த பிணத்தை வீட்டில் இருந்து எப்படி எடுத்து வந்தார் என்று தெரியவில்லை.

மோட்டார் சைக்கிள் அல்லது 3 சக்கர வாகனங்களில் எடுத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழ்மணி தலைமறைவாகி விட்டார். எனவே அதுபற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஸ்டெல்லா மயக்கம் அடைந்ததால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சையில் இருப்பதால் முழுமையான விசாரணை நடத்த முடியவில்லை.

சிகிச்சை முடிந்ததற்கு பிறகு விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு இதன் முழு விவரங்கள் தெரியவரும்.
Tags:    

Similar News