செய்திகள்

செல்போன் கட்டுப்பாடு எதிரொலி - மீனாட்சி கோவிலில் உள்ளூர் பக்தர்களின் வருகை குறைந்தது

Published On 2019-05-07 10:23 GMT   |   Update On 2019-05-07 10:23 GMT
செல்போன் கட்டுப்பாடு காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளூர் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.
மதுரை:

உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கோவில் பாதுகாப்பை கருதி பக்தர்கள் செல்போனை கொண்டு செல்ல தடை விதித்தது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கோவில் அதிகாரிகள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

வழக்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விசே‌ஷ நாட்களில் உள்ளூர் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

தற்போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல விரும்பாமல் வெளிப்புறத்தில் நின்று சாமி கும்பிட்டு செல்கின்றனர். ஆனால் வெளியூர் பக்தர்கள் கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் பாதுகாப்பு அறையில் 10 ரூபாய் கட்டணத்தில் செல்போனை வைத்து விட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், செல்போன் கட்டுப்பாடு இல்லாதபோது நான் தினமும் கோவிலுக்கு சென்று வந்தேன். தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் இருப்பது கடினம்.

தினமும் 10 ரூபாய் கொடுத்து கோவிலுக்கு செல்ல முடியாததால் மாதத்துக்கு ஒரு முறை கோவிலுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News