செய்திகள்

புதுவையில் வாலிபரை கொன்று சாக்கடை கால்வாயில் வீச்சு

Published On 2019-05-06 12:15 GMT   |   Update On 2019-05-06 12:15 GMT
முதலியார்பேட்டையில் சாக்குமூட்டையில் கட்டி வாலிபர் பிணம் கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் இடையே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இன்று காலை 6 மணியளவில் தாசில்தார் அலுவலகத்தின் இரவு நேர காவலாளியாக வேலைபார்க்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் கழிவுநீர் வாய்க்கால் அருகே சிறுநீர் கழிக்க சென்றார்.

அப்போது கழிவுநீர் வாய்க்காலில் பெரிய சாக்குமூட்டை கிடந்ததை கண்டார். இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜ் இதுபற்றி முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த சாக்கு மூட்டையை வெளியே எடுத்து பிரித்து பார்த்தனர்.

அப்போது அந்த சாக்கு மூட்டையில் 38 வயது மதிக்கதக்க வாலிபர் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபர் கறுப்பு நிற பேண்டும், காக்கி கலரில் சட்டையும் அணிந்து இருந்தார். பிரெஞ்சு ஸ்டைலில் தாடி வைத்திருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரங்கநாதன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வாலிபர் உடலில் காயங்கள் ஏதும் இல்லை. கால்கள் மட்டும் முறிந்து காணப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் அந்த வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் திணிக்கும் போது கால்கள் முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

மேலும் மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கழிவு நீர் வாய்க்காலில் வீசி விட்டு சென்று இருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வாலிபரை கொலை செய்து கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வாலிபர் கொலை செய்யப்பட்டு உடலை சாக்கு பையில் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News