செய்திகள்

வில்லியனூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் சிக்கினர்

Published On 2019-05-03 10:34 GMT   |   Update On 2019-05-03 10:34 GMT
வில்லியனூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் ஆச்சார்யாபுரம் பாலத்தின் கீழே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசார், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் உதவியுடன் நேற்று இரவு ஆச்சார்யாபுரத்தில் உள்ள பாலம் பகுதிக்கு சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர் இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது அவர்களது சட்டை பையில் சிறு சிறு பொட்டலங்களாக 360 கிராம் உள்ள 51 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

அதனை பறிமுதல் செய்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மங்கலம் கணபதி நகரை சேர்ந்த தமிழரசன் (வயது19), ஆச்சார்யாபுரத்தை சேர்ந்த அஜித் என்ற மலைச்சாமி (20), அருண் (19) என்பதும் இவர்கள் திருவண்ணாமலையில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News