செய்திகள்

அமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்

Published On 2019-04-19 09:32 GMT   |   Update On 2019-04-19 09:32 GMT
அமமுகவின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AMMK #TTVDhinakaran #Sasikala
சென்னை:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்.

சமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

தற்போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

இதுபற்றி, அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.



சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அவர் அமமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் சிஆர் சரஸ்வதி தெரிவித்தார். #AMMK #TTVDhinakaran #Sasikala
Tags:    

Similar News