செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

Published On 2019-04-10 10:51 GMT   |   Update On 2019-04-10 10:51 GMT
புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி சாந்திமதி (வயது 45). இவர்களுக்கு பொன்னி, தாமரை ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதி (70) என்பவரும் வசித்து வருகிறார்.

பொன்னியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆஸ்பத்திரி செலவுக்காக பொன்னி தனது நகைகளை புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியில் அடகு வைத்து விட்டு ரூ.6 லட்சம் பெற்றார். பின்னர் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தாயார் சாந்திமதியுடன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள். ஸ்கூட்டியின் பின்னால் சாந்திமதி இருந்தார். அப்போது யாரோ அவர் மீது அரிப்பு பொடியை தூவியதாக தெரிகிறது.

இதனால் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும் பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு சாந்திமதி ஒரு அறைக்கு சென்று விட்டார். கட்டிலில் ரங்கநாதனின் தாயார் பார்வதி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து கட்டிலில் இருந்த பணப்பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

பின்னார் அவர் அங்கு நின்ற மற்றவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் சூப்பிண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்னி வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வருவதை பார்த்து நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையொட்டி அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் ஒரு வங்கியின் அருகே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது கட்டிட காண்டிராக்டர் ரங்கநாதன் வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண்பாண்டி (22), மூர்த்தி (48) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் பெரும்பாலும் அரிப்பு பொடியை தூவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News