செய்திகள்

யுகாதி திருநாள் - திருப்பதி கோவிலுக்கு கோயம்பேடு பூக்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2019-04-06 08:46 GMT   |   Update On 2019-04-06 08:46 GMT
யுகாதி திருநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் 2 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. #Ugadi #Tirupati
சென்னை:

யுகாதி திருநாளான தெலுங்கு வருடப்பிறப்பு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2 டன் பூக்கள் மற்றும் மலர் மாலைகள் லாரி மூலம் அனுப்பப் பட்டது.

கோயம்பேடு மலர் அங்காடி வியாபாரிகள் சார்பில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி திருநாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 4 டன் பூக்கள், மாலைகள் லாரி மூலம் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படுகிறது.

இந்த ஆண்டும் கோயம்பேடு மொத்த பூ வியாபாரிகள் 20 பேர் மார்க்கெட்டில் பணம் வசூல் செய்து அதன் மூலம் 2 டன் பூக்கள் மற்றும் மலர் மாலைகள் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு லாரி மூலம் அனுப்பி உள்ளனர்.

அதில் 8 வகையான பூக்கள் அனுப்பப்பட்டுள்ளது. ரோஜா, லில்லி உள்ளிட்ட பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாலைகள் கண்ணை கவரும் வகை யில் அமைந்து இருந்தன.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி ஏ.எஸ்.மணி கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், கடப்பா, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.

இந்த ஆண்டு கடும் வறட்சி மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் பூக்கள் உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலுக்கு யுகாதி திருநாளையொட்டி கோயம்பேட்டில் இருந்து 4 டன் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு வறட்சி காரணமாக 2 டன் பூக்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எந்தவித தடையும் இல்லாமல் திருப்பதி கோவிலுக்கு பூக்கள் அனுப்புவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News