செய்திகள்

இலவச நவீன கழிப்பறை அமைக்கக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-04-05 20:25 GMT   |   Update On 2019-04-06 00:24 GMT
பொது இடங்களில் இலவச நவீன கழிப்பறை அமைக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHighCourt
மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் கரூரை சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதிகளை உருவாக்கி தர வேண்டும் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள கழிப்பறையில் நபர் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை. தமிழகத்தில் பல்வேறு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையம் என பெரும்பாலான பொது இடங்களில் இலவச பொது கழிப்பறைகள் சுகாதாரமானதாக இல்லை.

டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நவீனவசதிகளுடன் இலவச கழிப்பறை வசதிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சிக்கு சொந்தமான கழிப்பறைகள், குறைந்த ஒப்பந்த தொகைக்கு ஏலம் விடப்படுகிறது. ஆனால் ஒரு முறை பயன்படுத்துவதற்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நகராட்சி விதிகளுக்கு எதிரானது. எனவே தமிழகம் முழுவதும் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கழிப்பறை காண்டிராக்டர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், விமான நிலையங்கள் என பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், பொது இடங்களில் இலவச நவீன கழிப்பறைகள் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.#MaduraiHighCourt
Tags:    

Similar News