செய்திகள்

மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Published On 2019-04-05 19:29 GMT   |   Update On 2019-04-05 19:29 GMT
மே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவிவருகிறது. அனைத்து வகை செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாறி உள்ளது.

தற்போது நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. இதனை படிப்படியாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்கான 8 செயற்கைகோள்கள் அடுத்த மாதத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.



ரேடார்களை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்’ வகை செயற்கைகோள் மற்றும் ‘கார்ட்டோசாட்-3’ வரைபட செயற்கைகோள் பாதுகாப்பு துறை பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளன. ஏற்கனவே ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்களில் இருந்து துல்லியமான தகவல் களை பெறமுடியாததால் தற்போது ஏவப்பட உள்ள செயற்கைகோள்களில் துல்லியமான தரவுகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த செயற்கைகோள்கள் மூலம் இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் தரவுகளை தெளிவாக பெற முடியும். எல்லையை கண்காணிக்க இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். செயலிழந்த செயற்கைகோள்களுக்கு பதிலாக தான் புதிய செயற்கைகோள்கள் ஏவப்பட இருக்கிறது.

ரீசாட்-2பி மே மாதமும், கார்ட்டோசாட்-3 ஜூன் மாதமும், ரீசாட்-2பிஆர்1 ஜூலை மாதமும், ஜீசாட்-1 (புதியது) செப்டம்பர் மாதமும், ஆர்1சாட்- 2பிஆர்2 அக்டோபர் மாதமும், ஜி1சாட்-2 மற்றும் ஆர்1சாட்-1ஏ நவம்பர் மாதமும், ஜி-சாட்-32 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #ISRO
Tags:    

Similar News