செய்திகள்

முத்துப்பேட்டை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நூதன போராட்டம்

Published On 2019-02-23 11:45 GMT   |   Update On 2019-02-23 11:45 GMT
முத்துப்பேட்டை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் புயலால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காத அரசை கண்டித்தும், அதனை உடனே சீரமைக்க கோரியும், கஜா புயலுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் வழங்கிட வேண்டியும், புயலால் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே சரி செய்யக்கோரியும், ஊராட்சியில் உள்ள உட்புற சாலைகளை சீர் செய்ய கோரியும் உப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் சடங்கு நடத்தி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் உப்பூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிராம கமிட்டி தலைவர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் செல்வரெத்தினம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாரதிராமன் மற்றும் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னை மட்டையை சாலையில் வைத்து அதில் குடங்களை அடுக்கி வைத்து சடங்கு செய்து தங்களது கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைராஜன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News