செய்திகள்

ஜெயலலிதா மரணம்- விசாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜர்

Published On 2019-02-18 04:19 GMT   |   Update On 2019-02-18 07:07 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் முன் ஓ.பன்னீர் செல்வம் நாளை ஆஜராகிறார். #JayaDeathProbe #OPS
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் இதுவரை ஜெயலலிதாவின் உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், கார் டிரைவர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் என 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், அரசு எடுத்த முடிவுகள் குறித்து அவர் விரிவாக வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

தற்போது ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதைத்தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.



ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது துறைகளை கவனித்தவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே ஓ.பன்னீர்செல்வத்தை விசாரித்தால் முழு விவரமும் தெரியவரும் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஆணையத்தில் ஆஜராகும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு தெரிந்த தகவல்களை முதலில் கூறுவார்.

அதன்பிறகு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஓ.பன்னீர் செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்துவார். அப்போது பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க உள்ளதாக அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

இதனால் நாளைய விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. #JayaDeathProbe #OPS
Tags:    

Similar News