செய்திகள்
திருட்டு போன நடராஜர் சிலை

சிவன் கோவிலில் 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு - 47 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு

Published On 2019-02-15 03:15 GMT   |   Update On 2019-02-15 03:15 GMT
கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 7 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Ponmanickavel
சென்னை:

கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக தற்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-5-1971-ல் கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான 5 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போய்விட்டது.

போலீசில் புகார் கொடுத்தும் கடந்த 47 வருடங்களாக உரிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதேபோல 1972-ல் அதேகோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலையும், கொலு அம்மன் ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

இதுதொடர்பாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.



இதுபற்றிய தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் உப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளில் சில உண்மையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Ponmanickavel
Tags:    

Similar News