செய்திகள்

அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மேலும் தாமதம்

Published On 2019-02-05 14:25 GMT   |   Update On 2019-02-05 14:25 GMT
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருவதால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. #JactoGeo
தருமபுரி:

ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 4-ந் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு சம்பளத்தை பிடித்து மீதி நாட்களுக்கு சம்பளம் போட்டு அந்த பட்டியல் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலைக்குள் சம்பளம் வந்துவிடும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சம்பளம் வரவில்லை.

இது குறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 24 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10 பேர், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

24 ஆசிரியர்களுக்கு 17டி பிரிவின்கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் மீது பணி நீக்கம் செய்தல், வருடாந்திர ஊதிய உயர்வு வழங்காதது போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரும், பள்ளிக்கல்வி ஆசிரியர் ஒருவரும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருவதால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
Tags:    

Similar News