செய்திகள்

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-02-01 04:56 GMT   |   Update On 2019-02-01 04:56 GMT
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறமைகளை வளர்க்க ‘ரோபோ’ மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை விரைவில் பள்ளிகளில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதிபாளையத்தில் ரூ.13.20 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பூமி பூஜை நடத்தி பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாதிபாளையத்தில் ரூ.44 கோடி செலவில் 528 குடியிருப்பு வீடுகள், நம்பியூரில் ரூ.48 கோடி ரூபாய் செலவில் 528 வீடுகள், எலத்தூரில் ரூ.39 கோடி மதிப்பில் 456 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

கோபி பவளமலை கோவில் அருகே 6 ஏக்கர் நிலத்தில் ரூ.6 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது.

வட மாநிலங்களில் தீவிரவாதம் இருக்கலாம். தீவிரவாதம் தலை தூக்கலாம். ஆனால் தமிழகத்தில் தீவிரவாதம் இல்லை. நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பொதுமக்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடை வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் இண்டர்நெட் வசதியுடன் தொடங்கப்படும்.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறமைகளை வளர்க்க ரோபோ மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை விரைவில் பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சரிடம், பள்ளி கல்வித்துறையில் ஊழல், அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது- சஸ்பெண்டு நடவடிக்கைகள் பற்றி நிருபர்கள் கேட்டபோது, ‘‘இதுபற்றி பதில் சொல்லாமல் இருப்பது மேல்... நல்லது’’ என்று கூறி முடித்து கொண்டார். #MinisterSengottaiyan


Tags:    

Similar News