செய்திகள்

பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 104 போலீசார் நியமனம்

Published On 2019-01-31 08:50 GMT   |   Update On 2019-01-31 08:50 GMT
பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #PonManickavel
சென்னை:

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியான பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்றதையடுத்து அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதில் கூடுதல் டி.எஸ்.பி. ஒருவரும் இடம் பெற்றுள்ளார். 14 இன்ஸ்பெக்டர்கள், 43 சப்-இன்ஸ்பெக்டர்களும் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பொன்.மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்றுவார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போலீசார் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இதனை காரணம் காட்டி, பணி நீட்டிப்பை ரத்துசெய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் தான் டி.ஜி.பி ராஜேந்திரன் புதிய போலீசாரை பொன். மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்ற நியமித்துள்ளார்.

பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான தகவல்களை அரசுக்கு முறையாக தெரிவிப்பது இல்லை என்று தமிழக அரசின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னர் சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை கைது செய்தார். தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக பொன். மாணிக்கவேலுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #PonManickavel

Tags:    

Similar News