செய்திகள்

ஜெயலலிதா மரணம்: சசிகலாவிடம் விசாரணை இல்லை-ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

Published On 2019-01-24 02:38 GMT   |   Update On 2019-01-24 02:39 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
சென்னை :

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.

சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளார்.

தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் இவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க தங்கள் தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு உறுதியாக உள்ளது.

ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காத பட்சத்தில் தங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்த உள்ளதாக சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-



ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே சரியான முடிவு எடுக்கவில்லை என சிலர் அளித்த வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை ரிச்சர்டு பீலே மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே, ரிச்சர்டு பீலே கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

கடந்த 9-ந் தேதி மதியம் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ரிச்சர்டு பீலேவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென்று அவரிடம் விசாரணை நடத்தும் முடிவை ஆணையம் கைவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறினார். ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எந்த சூழ்நிலையில், எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் எங்கள் தரப்பில் அவரிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வக்கீல்கள் ஆணையத்துக்கு அளித்து வருவதால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் மூலம் சசிலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தும் முடிவையும் ஆணையம் கைவிட்டுள்ளது தெரிகிறது.

அதேவேளையில் அப்பல்லோ நிர்வாகமும், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்காமல் ஆணையம் தனது விசாரணையை முடிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், பிப்ரவரி 24-ந் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala 
Tags:    

Similar News