செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,360 பேருக்கு சிகிச்சை

Published On 2019-01-22 18:23 GMT   |   Update On 2019-01-22 18:23 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,360 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவை:

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சிகிச் சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,360 பேருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தான் அதிகளவு வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் வாங்கப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து நோய்களுக்கும் தனித்தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்ப தகராறு உள்பட பல்வேறு விதமான பிரச்சினைகள் காரணமாக மனவேதனை அடையும் சிலர் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுக்கின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,507 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2,360 பேர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடுதிரும்பினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த 147 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இதில், எலி மருந்து, தென்னை மரத்துக்கு போடப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றவர்கள் அதிகம்.

வாழ்க்கையில் எவ்வளவு தான் பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News