செய்திகள்

தொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் உருவாக்கிய ‘சக்தி’ திட்டம் - திருநாவுக்கரசர் தொடங்கி வைக்கிறார்

Published On 2019-01-17 09:37 GMT   |   Update On 2019-01-17 09:37 GMT
தொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் காந்தி உருவாக்கிய ‘சக்தி’ திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 21-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #Thirunavukkarasar
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி “சக்தி” என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, மாவட்ட, வட்டார, கிராம மற்றும் வாக்குச் சாவடி அளவில் செயல்படும் கோடிக்கணக்கான கட்சி தொண்டர்களை இணைக்கும் முயற்சியை தொடங்கி உள்ளார்.

இந்த சக்தி திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 2018-ல் துவங்கப்பட்டு, இதுவரை 53 லட்சம் உறுப்பினர்கள் சக்தியில் வெற்றிகரமாக இணைந்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், நடப்பு செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சக காங்கிரஸ் தொண்டர்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சக்தியாக இத்திட்டம் விளங்குகிறது.

எனது தலைமையில் சக்தி திட்டத் தொடக்கவிழா வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் ஆய்வுத்துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரி வல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுவார்கள்.

விழாவில், மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் உள்ளவர்கள் சக்தியில் இணைய விரும்பினால், தங்களுடைய கைபேசி வழியாக அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை தமிழகத்திற்கான பிரத்யேகமான எண்ணிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமாக சுலபமாக சக்தியில் இணைந்துவிடலாம்.

சக்தியில் இணைபவர்கள் நேரடியாக கட்சி தலைமையுடன் ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

உள்ளூர் தலைவர்கள் வாக்குச்சாவடி அளவில் உள்ள தொண்டர்களின் மூலமாக நேரடியாக அப்பகுதி மக்களிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

தொண்டர்களின் கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிந்து கொள்வதற்கும், காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்துவதற்கும், செயல்திட்டங்கள் வகுப்பதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கப்பட இருக்கிறது.

சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படுகிற அவதூறு பிரசாரங்களை முளையிலேயே முறியடிப்பதற்கு சக்தி திட்டம் ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

எதிர்காலத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்கிற பொழுது சக்தி திட்டத்தின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். எனவே சக்தி திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக உருவாக்கி காங்கிரஸ் கட்சியினரிடையே இதனை ஒரு இணைப்புப்பாலமாக அமைத்திட இதில் பெருமளவில் தங்களை பதிவு செய்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Thirunavukkarasar

Tags:    

Similar News