செய்திகள்

தமிழக அரசை மத்திய அரசு இயக்கவில்லை- தம்பிதுரை

Published On 2019-01-09 10:00 GMT   |   Update On 2019-01-09 10:00 GMT
தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
பீளமேடு:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பொருளாதார இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ரூ. 8 லட்சம் வருமானம் என்பது மாத வருமானம் ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்.

இதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. 37 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து விட்டு இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தமிழகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பல தலைவர்கள் போராடினார்கள்.

ஜாதி வேற்றுமை நீங்க வேண்டும். மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என திராவிட கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறது. நாம் அனைவரும் சூத்திரர்கள் தான்.

சமத்துவத்தை கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். பொருளாதாரம் என்பது தொடர்ந்து மாறுபடும். அதை நிர்ணயித்து இட ஒதுக்கீடு செய்தது தவறு.

இந்த மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக எனது கண்டன உரையை பாராளுமன்றத்தில் பதிவு செய்து உள்ளேன்.

காவிரி, மேகதாது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. சில திட்டங்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சில திட்டங்களை ஆதரித்துள்ளோம்.

தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

மத்திய அரசிடம் நட்புவேறு. மண்டியிடுவது வேறு. தமிழக அரசை மத்திய அரசு இயக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. தமிழக மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடத்தி வருகிறோம்.


பாதுகாப்பு துறை ஊழல் பற்றி பேசினால் நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். அகஸ்தா விமானம் வாங்க முடிவு செய்தது பாரதிய ஜனதா. அதனை வாங்கியது காங்கிரஸ்.

ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது காங்கிரஸ். அதனை வாங்கியது பாரதிய ஜனதா. ஊழலில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
Tags:    

Similar News