செய்திகள்

கஜா புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் ரூ.1½ லட்சமாக உயர்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-01-04 08:23 GMT   |   Update On 2019-01-04 08:23 GMT
கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone
சென்னை:

சட்டசபையில் இன்று கஜாபுயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கஜாபுயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பயிர்களும் மரங்களும் விழுந்தன. வீடுகள் பெரும் சேதம் அடைந்தன. 78 ஆயிரத்து 584 ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. 23 ஆயிரத்து 141 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

20 ஆயிரத்து 357 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 5 லட்சத்து 5 ஆயிரத்து 742 குடிசைகள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இவை அனைத்தையும் சீரமைத்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

கஜா புயல் பாதிப்பு பற்றி அறிந்ததும் உறவினர்கள் மூலம் நான் அந்த பகுதிகளை பார்வையிட சென்றேன். மழை மற்றும் வானிலை காரணமாக சில இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பாதிப்பின் தாக்கத்தை என்னால் அறிய முடிந்தது. அந்த மக்களுக்கான உதவிகளை உடனடியாக செய்வதற்காக அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.

மின் இணைப்புகள் கொடுக்கும் பணி இரவு பகலாக நடந்தது. நிவாரண பணிகளில் தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கின்றன.

பல்வேறு சூழ்நிலை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் இந்த பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நிவாரண முகாமில் தங்கிய அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. சரிந்த தென்னை மரங்களை அகற்றவும், விவசாயிகள் மறு சீரமைப்புக்காக சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

11 லட்சத்து 66 ஆயிரம் பேர் இந்த புயலின் போது பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. புயல் நிவாரணம் பாதிப்புக்கு தகுந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். மத்திய அரசின் குழுவும் உடனே வந்து கணக்கீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியும் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரணம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இதுபோன்று விவசாயிகளுக்கும் தேவையான நிவாரண உதவியை வழங்க அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கும்.

கஜா புயலின் போது இரவு-பகலாக மீட்பு பணிக்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் அங்கேயே தங்கி இருந்து பணிகளை விரைவாக செய்ய உதவிய அமைச்சர்களுக்கும், நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கீட்டின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News