செய்திகள்

கமுதி பகுதிகளில் மணல் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Published On 2019-01-02 11:08 GMT   |   Update On 2019-01-02 11:08 GMT
கமுதி பகுதிகளில் மணல் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கமுதி:

கமுதி மண்டல மாணிக்கம், பெருநாழி, பேரையூர், அ.நெடுஞ்குளம், அபிராமம் உள்பட பல பகுதிகளில் மணல் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் இல்லாததால் கட்டுமானப்பணி உள்பட பல பணிகளுக்கு மணல் இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

லாரி மற்றும் டிப்பர் லாரிகளில் 3 யூனிட் மணல் ரூ.28 ஆயிரத்துக்கு திருட்டுத்தனமாக இரவோடு, இரவாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக கமுதி, அபிராமம் பகுதிகளில் குண்டாறு, மலட்டாறு, பரளையாறு படுகையிலும், கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அரசு தனியார் கட்டுமான பணிகளுக்கான இரவு நேரங்களில் வேன், டிராக்டர் ஆட்டோ, கார், லாரி ஆகிய வாகனங்களில் மணல் கடத்தப்படுகிறது.

கமுதி அருகே “எம்.சாண்ட்” மணல் பெர்மிட் பெற்றுக் கொண்டு ஆற்றுப் பகுதிகளில் இருந்து ஆற்று மணல் கடத்தி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

விவசாய நிலங்களும், ஆறுகள், கண்மாய்களிலும் எவ்வித அனுமதியின்றி வாகனங்களில் மணல் கடத்தப்படுகிறது.

மண்டலமாணிக்கம், விலையபூக்குளம், புதுக்குளம், புதுப்பட்டி, ம.பச்சேரி, புத்துருத்தி, காக்குடி, அபிராமம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குண்டாறு, பரளையாறு, கிருதுமால் நதி ஆற்று படுகையில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய மழை இல்லாமலும் ஆற்றுப்படுகையில் மணல் திருடப்படுவதாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அதிகாரிகள் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News