செய்திகள்

பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி

Published On 2018-12-31 09:23 GMT   |   Update On 2018-12-31 09:23 GMT
திண்டுக்கல் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி காந்திநகர்-இ.பி.காலனி சாலையில் புதிதாக பாலம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் நடை பெறுவது குறித்து எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை.

மேலும் அப்பகுதியில் மின்விளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நந்தவனப்பட்டி வேலப்பர் கொட்டத்தை சேர்ந்தவர் சங்கர். எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வந்தார். பைக்கில் இ.பி.காலனி அருகே உள்ள பாலப்பகுதியில் 8 அடி ஆழ பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறு பைக்குடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இன்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அறிவிப்பு பலகை இல்லாததால் இவ்விபத்து நடந்துள்ளது. எனவே ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என சங்கரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News