செய்திகள்

குட்கா குடோன் சோதனையை பாதியில் நிறுத்த உத்தரவிட்ட உயர் அதிகாரி யார்? போலீசாரிடம் சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

Published On 2018-12-28 23:48 GMT   |   Update On 2018-12-28 23:48 GMT
குட்கா குடோனில் நடந்த சோதனையின்போது, சோதனையை பாதியில் நிறுத்த உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி யார்? என குடோனில் சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ.போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். #Gutkascam #CBI
சென்னை:

குட்கா ஊழல் வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. போலீசார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு தற்போது அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கி விட்டது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில், அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தலையீட்டின்பேரில், அந்த சோதனை முழுமையாக நடைபெறாமல் பாதியில் முடிக்கப்பட்டதாக தெரிகிறது.

அப்போது சோதனை முழுமையாக நடைபெற்று இருந்தால், குட்கா ஊழல் இவ்வளவு பெரிய விசுவரூபம் எடுத்திருக்காது. அதன் பிறகுதான் வருமானவரித்துறையினர் குறிப்பிட்ட குட்கா குடோனில் சோதனை நடத்தி, ரூ.40 கோடி லஞ்ச ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது முதல் கட்ட விசாரணையிலேயே ஜெயக்குமாரிடம் விசாரித்து முடித்துவிட்டனர்.

குட்கா குடோனில் ஜெயக்குமார் சோதனை நடத்தியபோது, அவருடன் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 7 பேர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

குட்கா குடோனில் நடந்த சோதனையை பாதியில் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி பற்றி நேற்றைய விசாரணையில் துருவி, துருவி சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. விரைவில் அந்த உயர் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவார்கள் என்று தெரிகிறது. #Gutkascam #CBI
Tags:    

Similar News