செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் நீக்கம் வரவேற்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-12-20 04:21 GMT   |   Update On 2018-12-20 04:21 GMT
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் நீக்கம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
சென்னை:

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டது ஏன்?

பதில்:- ‘அண்ணன் என்னடா? தம்பி என்னடா? இந்த அவசரமான உலகத்திலே’ என்கிற மாதிரி, கட்டுக்கோப்பான இயக்கத்தில் கட்சி விரோத நடவடிக்கையை யார் செய்தாலும் சரி, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் தான்.

இதில் அண்ணன், தம்பி உறவுக்கு இடம் இல்லை. எனவே அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்ததாலும் தவறு என்றால் தவறு தான். எனவே அந்த அடிப்படையில் யார் தவறு செய்தாலும் சரி, நிச்சயம் நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உணர்த்தி இருக்கிறார்கள்.

கேள்வி:- ஓ.ராஜா நீக்கத்துக்கு என்ன காரணம்?

பதில்:- கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்ல முடியாது. தம்பி என்றும் பார்க்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். நல்ல விஷயம்.

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணத் தொகை எப்போது கிடைக்கும்?

பதில்:- இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சரே, பிரதமரை நேரில் சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி கேட்டு இருக்கிறார். இதில் முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி கொடுத்து இருக்கலாம். ஆனால் ரூ.352 கோடி கொடுத்திருக்கிறார்கள். கேட்பது மலை அளவு கொடுப்பது எலுமிச்சை பழ அளவு போல் உள்ளது. தமிழ்நாட்டின் நிதியை வாங்கி தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஜனநாயக ரீதியில் கையாளுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar
Tags:    

Similar News