செய்திகள்

குட்கா ஊழல்: ரமணாவிடம் 2-வது நாளாக மீண்டும் விசாரணை- சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜர்

Published On 2018-12-16 08:21 GMT   |   Update On 2018-12-16 08:21 GMT
குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் இன்று 2-வது நாளாக மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். #GutkhaScam
சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததை கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோனில் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா விற்பனை தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கின.

குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஒவ்வொரு மாதமும் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரும் குட்கா ஊழலில் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது சிபிஐ விசாரணை வளையத்திற்குள் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பிவி ரமணாவும் வந்துள்ளார். அவரிடம் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழலில் இதுவரையில் ரமணாவின் பெயர் அடிபடாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரமணாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இன்றும் இருவரும் சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி முன்னாள் அமைச்சர் ரமணா இன்று 2-வது நாளாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழல் தொடர்பாக நேற்று ரமணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக இன்றைய விசாரணை அமைந்திருந்தது.
Tags:    

Similar News