செய்திகள்

பெண்களிடம் நகை பறிப்பு- கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள்

Published On 2018-12-03 11:34 GMT   |   Update On 2018-12-03 11:34 GMT
கோவையில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை பி.என்.புதூரை சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி ரமாதேவி (வயது 71).

இவர் அப்பகுதியில் நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் ரமாதேவி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாநகரின் அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.

இந்நிலையில் வெள்ள லூர்பட்டணம் சாலை முல்லை நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நகையை பறிக்க முயன்றனர். உடனே அந்த பெண் சத்தம் போடவும், பொதுமக்கள் திரண்டு நகைபறிக்க முயன்ற வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர்.

ஆவேசமடைந்த பொதுமக்கள் கொள்ளையர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். ஒரு இளம்பெண் கட்டையால் கொள்ளையர்களை தாக்கினார். பின்னர் இருவரையும் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த விஜய ராகவன், கார்த்திக் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நகைபறிப்பு வழக்கில் கைதான இவர்கள் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இவர்கள் இதற்கு முன்பு கோவையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பேரில் மீண்டும் கோவையில் கைவரிசை காட்ட திட்டமிட்டு வந்துள்ளனர். அதன்படி சாய்பாபா காலனியில் ரமாதேவியிடம் நகையை பறித்து விட்டு, அடுத்ததாக வெள்ளலூருக்கு சென்று நகைபறித்த போது பொதுமக்களிடம் சிக்கியது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைபறிப்பு கொள்ளையர்களை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்குவதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News