செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது

Published On 2018-12-03 09:13 GMT   |   Update On 2018-12-03 09:13 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested
சென்னை:
 
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
 
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.



இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts
Tags:    

Similar News