செய்திகள்

உசிலம்பட்டி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-11-30 11:34 GMT   |   Update On 2018-11-30 11:34 GMT
உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருந்தாலும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மாருதிநகர், சத்யாநகர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீருக்காக பெண்கள் நீண்டதூரம் சென்று அலையும் நிலை ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் உசிலம்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை-தேனி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News