செய்திகள்

மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-11-27 18:16 GMT   |   Update On 2018-11-27 18:16 GMT
மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை:

மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட முத்தன்தெரு பகுதியில், கஜா புயல் பாதிப்புக்கு பின்பு இன்னும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று காலை மணப்பாறை பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடும்படி கூறினர்.

ஆனால் பொதுமக்கள், ‘எங்கள் பகுதியில் குடிநீர் வருவதே இல்லை. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம்’ என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுபற்றி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆணையர் சுதா, பொறியாளர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் முத்தன் தெரு பகுதிக்கு உடனே சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் உடனடியாக நகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்குவதற்கான பணியை தொடங்கினர்.
Tags:    

Similar News