செய்திகள்

குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் வருவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Published On 2018-11-19 18:19 GMT   |   Update On 2018-11-19 18:19 GMT
குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி டி.எம்.சி. காலனி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் டி.எம்.சி. காலனியில் நூற்றுக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாயில் வரும் குடிநீருடன் அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும் குடிநீர் குழாயில் வந்த குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று இரவு திடீரென திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் இதுபோல அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை.

இதனால் கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரமான குடிநீர், சுத்தமான சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் நாங்கள் மாநகராட்சி துப்புரவு பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News