செய்திகள்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தீர்ப்பு நகல் அனுப்பப்பட்டது

Published On 2018-11-16 03:15 GMT   |   Update On 2018-11-16 03:15 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு நகலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டசபை செயலாளர் அனுப்பிவைத்தார். #18MLAsdisqualificationcase #TNElectionCommission
சென்னை:

அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் ப.தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நீதிபதிகள் 2 பேரும் வழங்கிய தீர்ப்பு மாறுபட்டதாக அமைந்ததால், 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி தனது தீர்ப்பை வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். அந்த தீர்ப்பின் சாராம்சம் 475 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்ப்பின் நகல் சமீபத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த நகலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு நேற்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அனுப்பிவைத்தார்.



இனி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தீர்ப்பு நகலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். விரைவில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsdisqualificationcase #TNElectionCommission
Tags:    

Similar News