செய்திகள்

கோயம்பேடு பகுதியில் கொள்ளை-வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது

Published On 2018-11-03 05:59 GMT   |   Update On 2018-11-03 05:59 GMT
கோயம்பேடு பகுதியில் கொள்ளை-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் நேற்று முன்தினம் இரவு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கொருக்குபேட்டை மீனாம்பிகை நகர் 6-வது தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் (25) பண்டிகையை முன்னிட்டு வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிட்டு பின்னர் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்தார் என்பது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து 11 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராமசந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுபோல் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய அலுவலகம் முன்பு நேற்று கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு பைக்கை திருடுவதும், செயின் பறிப்பில் ஈடுபடுவதும் பின்னர் அந்த பைக்கை விற்பனை செய்து விடுவதும் தெரியவந்தது. கோயம்பேடு பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட வந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது.

Tags:    

Similar News