செய்திகள்

ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் அடியோடு நிறுத்தம்

Published On 2018-11-02 08:25 GMT   |   Update On 2018-11-02 08:25 GMT
ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை  பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு நிறை வேற்றப்படுகிறது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வாட்டி எடுத்த கோடை வெயில் காரணமாக 4 ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து செப்டம்பர் 22-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது. வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்துகடந்த 28-ந் தேதி தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டது.

இதனால் வினாடிக்கு 1300 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் 31-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 29-ந் தேதியிலிருந்து கடந்த 31-ந் தேதி வரை 1.604 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.

கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் கொடுக்க வேண்டும்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 1.256 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. தற்போது 1.604 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 23.80 அடியாக பதிவாகின. 682 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் இணைப்பு கால்வாயில் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

தற்போது இதுவரை பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News