செய்திகள்

நான் பார்த்தபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்- ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர்ராவ் தகவல்

Published On 2018-11-01 07:44 GMT   |   Update On 2018-11-01 07:44 GMT
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்த்த போது மயக்க நிலையில் இருந்தததாக ஜனாதிபதிக்கு முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #Jayalalithaa #ApolloHospital #VidyasagarRao
சென்னை:

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவரை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்தவர்களிடம் தகவல் பெற்று விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடமும் தகவல்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஜனாதிபதிக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் வித்யாசாகர் ராவ் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. மறுநாள் நான் அவர் விரைவில் குணமாக வேண்டி கடிதம் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் 26-ந்தேதி ஜெயலலிதா பெயரில் வெளியான அரசாணையில் சாலை விபத்தில் பலியான 11 பேருக்கு நிதி உதவி அளிப்பதாக அறிக்கை வெளியானது. அதுபோல 27-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற இருக்கும் காவிரி வழக்கு விசாரணை தொடர்பாக அதிகாரிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

அதற்கு அடுத்த நாள் ஜெயலலிதா பெயரில் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் அறிவிப்பு ஜெயலலிதா பெயரில் வெளியாகி இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதற்காக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்பவர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இத்தகைய சூழ்நிலையில் 1-10-2016 அன்று நான் மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தேன்.

உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். நேரிடையாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு சென்று பார்த்தேன். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார்.


இதையடுத்து முதல்- அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், அப்பல்லோ மருத்துவமனை தலைவரிடமும் நான் கலந்துரையாடினேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டு அறிந்தேன்.

பிறகு தலைமை செயலாளரை அழைத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து சரியான மருத்துவமனை அறிக்கை வெளியிடுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன். மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டேன்.

இதுதொடர்பாக அன்றே அறிக்கை ஒன்றையும் நான் வெளியிட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்று சென்று விட்டு வந்தபிறகு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தினமும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி மருத்துவ அறிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் ஆண்டிபயாடிக் சிகிச்சைகள் பற்றி அப்பல்லோ மருத்துவமனை தெளிவாக தகவல்கள் வெளியிட்டது.

ஜெயலலிதா உடல் நிலை நன்றாக தேறி வருவதாகவும் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் மேலும் சில நாட்களுக்கு மட்டும் அவர் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டியதுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை ஒரு குறிப்பை வெளியிட்டது. மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்பீலே மூலம் சிகிச்சை அளிப்பது பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

அதன் பிறகு ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் தொடர்பான வதந்திகள் பற்றிய சந்தேகங்கள் கணிசமாக குறைந்தன. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா விரைவில் குணமாக எதிர்க்கட்சிகளும் வாழ்த்து தெரிவித்தன.

இதற்கிடையே ஜெயலலிதா உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒருபொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் தனது மனுவில், "ஜெயலலிதா முழுமையாக குணம் அடையும் வரை இடைக்கால முதல்-அமைச்சர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அந்த வழக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்கள்.

நானும் சென்னையில் முகாமிட்டுள்ளேன். இந்த பிரச்சனை தொடர்பாக நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். #Jayalalithaa #ApolloHospital #VidyasagarRao
Tags:    

Similar News