செய்திகள்

மழை நீரை சேமிக்க ஏற்பாடு- குடிநீர் வாரியம் நடவடிக்கை

Published On 2018-10-31 10:12 GMT   |   Update On 2018-10-31 10:12 GMT
கட்டிடங்களைச் சுற்றியுள்ள இடங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க பொதுமக்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை:

சென்னையில் மழைநீர் சேகரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பில் சென்னை ஒரு முன்னோடி மாநகரமாகத் திகழ்ந்து வருகிறது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் கட்டிடங்களின் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை வடிகுழாய் மூலம் நேரடி உபயோகத்திற்காக தொட்டிகள் மூலமும் உபரி நீரை கிணறுகளிலும் எடுத்துச் செல்கிறார்கள்.

ஆனால் கட்டிடங்கள் தவிர வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீரை சேமிக்கத் தவறி விடுகிறார்கள்.

இவ்வாறு செய்வதால் பெய்யும் மழைநீர் நுழை வாயில் மூலமாக தெருவிற்குச் சென்று வீணாவதோடு, தெருக்களில் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாகவும் அமைந்து விடுகிறது.

இதனைத் தவிர்ப்பதற்கு வீடுகளின் நுழைவாயில் அருகே ஒரு கால்வாய் ஏற்படுத்தி அதிலிருந்து நீரூட்டல் கிணறுகள் அமைத்து வீணாக வெளியேறும் நீரைச் சேமிக்கலாம்.

ஏற்கனவே மழை நீர் சேகரிப்பிற்கு நீரூட்டல் கிணறுகள் அமைத்துள்ளவர்கள் வீணாக வெளியேறும் நீரை அதில் சேமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

சென்னை நகரின் நீர்த்தாங்கிகள் பெரும்பாலும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையையே சார்ந்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை மூலமே சென்னை நகரில் நீர்த்தாங்கிகள் அதிகமாக செரிவூட்டப்படுகின்றன. அவ்வாறு செரிவூட்டப்படும் மழைநீர் காரணமாக சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு அடுத்த கோடைக்காலத்திற்கும் நிலத்தடி நீரை பயன்படுத்த உதவியாக இருக்கும்.

ஒரு வருடத்தில் 2,400 சதுர அடி பரப்பளவுள்ள இடத்திலிருந்து எடுக்கக்கூடிய நிலத்தடி நீரில் 1,62,720 லிட்டரை நாம் மழைநீர் சேகரிப்பின் மூலம் திரும்ப பூமிக்குள் செலுத்தி ஈடு கட்டுவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம். நிலத்தடி நீர்மட்டம் குறைவதையும் தவிர்க்கலாம்.

எதிர் வரும் வடகிழக்கு பருவ மழையினால் கிடைக்கும் நீரை வீணாக்காமல் வாயில் சென்று கலக்கவிடாமல் மேற்கண்ட சேமிப்பு முயற்சிகளை அனைத்து மக்களும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கட்டிடங்களைச் சுற்றியுள்ள இடங்களில் பெய்யும் மழைநீரை சேமிப்பதற்கு அமைக்க வேண்டிய கட்டமைப்புகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனை குறித்த விவரங்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் 2845 4080, 4567 4567 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். #tamilnews
Tags:    

Similar News