செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய போதை வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

Published On 2018-10-13 18:25 GMT   |   Update On 2018-10-13 18:25 GMT
காரைக்குடி அருகே போலீசார் வாகன சோதனையின் போது, செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கூத்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை. இவருடைய மகன் சின்ராசு (வயது 23). இவர் காரைக்குடியில் உள்ள கார், மோட்டார் சைக்கிள் வாஷ் செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் சின்ராசு உள்பட அவருடைய நண்பர்கள் 3 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் காரைக்குடிக்கு வந்தனர்.

அப்போது கோவிலூர் வாகன சோதனைச் சாவடி அருகில் வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், 3 பேரையும் சோதனைச் சாவடியில் அமர வைத்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் சின்ராசு, திடீரென எழுந்து சோதனைச் சாவடி அருகில் இருந்த தனியார் செல்போன் கோபுரத்தில் வேகமாக ஏறத் தொடங்கினார். சுமார் 150 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தன்னை யாராவது காப்பாற்ற முயன்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது.

தகவலறிந்து வந்த காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாபன், குன்றக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் உள்ளிட்ட போலீசார், காரைக்குடி தீயணைப்பு படை வீரர்கள் ஆகியோர் வாலிபர் சின்ராசுவிடம் சமரசமாக பேசி, அவரை கீழே இறங்க செய்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிய வாலிபரை போலீசார் குன்றக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் குடிபோதை மற்றும் மோட்டார் சைக்கிளின் ஆவணங்கள் இல்லாததால் போலீசாருக்கு பயந்து செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News