செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: நிர்வாக இயக்குனர் உத்தரவு

Published On 2018-10-04 02:12 GMT   |   Update On 2018-10-04 02:12 GMT
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். #Tasmac
சென்னை :

டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிருலோ‌ஷ் குமார், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸூம், 11.67 சதவீதம் கருணை தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

இதில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அறிவித்துள்ள அரசாணைப்படி போனஸ் பெற தகுதி உச்சவரம்பு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதனடிப்படையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களில் ரூ.21 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பணியாளர்கள் போனஸ் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய கூடிய மேற்பார்வையாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 400-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 300-ம், உதவியாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம் வழங்க வேண்டும்.

இந்த போனஸ் பட்டுவாடா சட்டம் 1956-ன்படி போனஸ் உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் என்ற அடிப்படை கொண்டு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நா.பெரியசாமி கூறியதாவது:-

டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டுகளில் 2 முறை பத்து, பத்து சதவீதமாக பிரித்து போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரே முறையாக 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் கடுமையான உழைப்பால் தமிழக அரசின் பட்ஜெட்டில் 33 சதவீதம் வருவாயை ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் உச்சவரம்பை காரணம் காட்டி வழங்கப்படும் 20 சதவீதம் என்று கூறி தடுப்பது சரியான நடவடிக்கை இல்லை.

40 சதவீதம் போனஸ் வாங்க தகுதியான இந்த பணியாளர்களுக்கு உச்சவரம்பை தளர்த்தி முழு தொகையை வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Tasmac
Tags:    

Similar News