செய்திகள்

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

Published On 2018-09-24 16:45 GMT   |   Update On 2018-09-24 16:45 GMT
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பிரிவு கெங்கரை கூட்டாடாவை சேர்ந்தவர் சாமிதாஸ் (வயது 63). தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் குட்டியுடன் இருந்த காட்டு யானை ஒன்று சாமிதாசை துரத்தி தாக்கியது.

காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர்.

பின்னர் படுகாயமடைந்த சாமிதாஸ் மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, மாவட்ட வனத்துறை அதிகாரி சுமேஸ் சோமன் விரைந்து வந்து காட்டு யானை தாக்கி உயிரிழந்த சாமிதாஸ் மனைவி மேரிக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது வனத்துறையினர், மேரியிடம் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தனர். மேலும் ரூ.3½ லட்சம் நிதி விரைவில் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழங்கள் விளைந்துள்ளன. இந்த பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான காட்டு யானைகள் இந்த பகுதியில் சுற்றி திரிகின்றன.

எனவே கிராம மக்கள் இரவு நேரங்கள், அதிகாலை நேரங்களில் தனியாக நடமாடக் கூடாது. மேலும் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்கிறவர்கள் கூட்டமாக சென்றால் பாதுகாப்பாக இருக்கும். விரைவில் பலாப்பழ சீசன் முடிந்து விடும் என்பதால், காட்டு யானைகள் வேறு பகுதிகளுக்கு சென்று விடும். காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார். 
Tags:    

Similar News