செய்திகள்

திண்டுக்கல் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்

Published On 2018-09-20 11:52 GMT   |   Update On 2018-09-20 11:52 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான கொடைக்கனால், பழனி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகள் அதிகமாக உள்ளதால், மலை அடிவார பகுதிகளில் கஞ்சா எனப்படும் போதை பயிர் வளர்க்கப்பட்டு வருகிறது. கஞ்சா பயிருக்கு ஏற்ற சீதோசனம் வருடம் முழுவதும் நிலவுவதால் இந்த பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா எளிதாக கிடைக்க கூடிய பொருளாக உள்ளது.

கன்னிவாடி, சிறுமலை அடிவாரம், அய்யலூர், பழனி குதிரையாறு அணை பகுதி, கொடைக்கானல் மேல்மலை கிராமமான பள்ளங்கி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை அனுப்பபட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையங்களில் புகார்களும் பதிவாகி உள்ளது.

இதில் சுற்றுலா தலங்களான கொடைக்கனால், பழனி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இளைஞர்கள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து இந்த கஞ்சா விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. சிறிய பெட்டிக் கடைகள் மட்டும் அல்லாது நகர்ந்து கொண்டே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் பகுதிக்கு உசிலம்பட்டி, வருசநாடு பகுதிகளிலிருந்து கஞ்சா வரத்து அதிகமாக கொண்டு வரப்படுகிறது.

திண்டுக்கல் நகர் பகுதிகளில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்தேறிக் கொண்டு இருக்கிறது. கொடைக்கானல் பகுதியில் பஸ் நிலையம், மற்றும வட்டகாணல், பள்ளங்கி கோம்பை, மற்றும மேல் மலை பகுதிகள், பழனியில் நெய்காரப்பட்டி, பாப்பம்பட்டி, அடிவாரம், குதிரையாறு டேம், சத்திரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சத்திரப்பட்டி போலீசார் 6 மாத காலத்தில், 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

வேடந்தூர் தாலுகா பகுதிகளான எரியோடு, வடமதுரை, அய்யலூர் உள்ளிடட பகுதிகளில் கஞ்சா சாதராணமாக கிடைத்து வருகிறது. நத்தம் தாலுகா சாணார்பட்டி, அஞ்சு குழிபட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. வத்தலகுண்டு பெத்தாணியபுரம் பகுதியில் விற்பனை சூடுபிடித்து நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கமர்கட்டு விற்பது போல், கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News