தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை அப்பாசாமி கார்டன் தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி லட்சுமி (58).
இவர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 15 நாட்களாக வேலைக்கு வராத லட்சுமி இன்று ஆஸ்பத்திரிக்கு வந்தார். உடன் பணிபுரிவர்களிடம் “எனக்கு 2 மகன்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை. அவர்கள் என்னை கவனிப்பதே இல்லை” என்று கூறி வேதனைப்பட்டார்.
இந்த நிலையில் பகல் 11 மணியளவில் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் லட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்றவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
பலத்த காயம் அடைந்த லட்சுமி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews