செய்திகள்

விசாரணை செய்யாமல் காங்கிரசில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது - நீக்கப்பட்ட 7 பேர் அறிக்கை

Published On 2018-09-05 09:34 GMT   |   Update On 2018-09-05 09:34 GMT
விசாரணை செய்யாமல், விளக்கம் எதுவும் கேட்காமல் உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீக்கப்பட்ட 7 பேரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி தலைவர் ஏ.வி.எம்.ஷெரீப், வில்லிவாக்கம் பகுதி முன்னாள் தலைவர் வில்லிவாக்கம் ஜான்சன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் பொன் மனோகரன், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் தலைவர் கடல் தமிழ்வாணன், மயிலை பகுதி முன்னாள் தலைவர் முரளிதரன், மத்திய சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாச மூர்த்தி, வடசென்னை மாவட்ட முன்னாள் பொது செயலாளர் டி.பி.பாஸ்கரன் ஆகிய 7 பேரையும் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் நீக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நீக்கப்பட்ட 7 பேரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறி இருப்பதாவது:-

சத்தியமூர்த்திபவனில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்டத் தலைவர்கள் அல்லாத சிலரும் இந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதைப் பார்த்து அனைவரையும் அனுமதிப்பதாகக் கருதி நாங்களும் கூட்ட அரங்கிற்குள் சென்றோம். எங்களைப் பார்த்த உடன் வேண்டுமென்றே வெளியேறும்படி சத்தம் போட்டார்கள்.

பாரதிய ஜனதா, அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களெல்லாம் அரங்கின் உள்ளே இருக்கும்பொழுது காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ஏன் உள்ளே வரக் கூடாது எனக் கேட்டுவிட்டு வெளியேறிவிட்டோம்.

வெளியேறிய எங்களை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகாத வார்த்தைகளை பேசி சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். உடனே அங்கே வந்த திருநாவுக்கரசர் எங்களைப் பார்த்து கடும் சொற்களால் மிரட்டினார்.

அப்போது பாரதிய ஜனதாவிலிருந்து வந்த வீரபாண்டியன் என்பவர் எங்களை தாக்கினார். இதைக் கேள்விப்பட்டு அரங்கில் உள்ளிருந்து வெளியே வந்த இளங்கோவன் எங்களை அமைதியாக செல்லும்படி அறிவுறுத்தினார். நாங்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.

ஆனால் எந்த விசாரணையும் செய்யாமல், எந்தவித விளக்கமும் எங்களிடம் கேட்காமல் எங்களை கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளதாக மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நீக்கத்தைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய்தத், சென்னா ரெட்டி ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆகவே, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வந்த திருநாவுக்கரசர் கட்சியை உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை நீக்கியது எந்தவிதத்திலும் செல்லாது. நாங்கள் எப்போதும் போல காங்கிரஸ்காரர்களாவே தொடர்ந்து செயல்படுவோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News