செய்திகள்

விநாயகர் சிலை நிபந்தனைகளை எதிர்த்து வழக்கு - ராமகோபாலன் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்- ஐகோர்ட்டு

Published On 2018-08-31 11:50 GMT   |   Update On 2018-08-31 11:50 GMT
விநாயகர் சிலை நிபந்தனைகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தொடர்பாக ராமகோபாலன் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #VinayagarChathurthi

சென்னை:

இந்து முன்னணி அமைப்பின் அமைப்பாளரும், விநாயகர் சதுர்த்தி மத்தியக்குழு என்ற அமைப்பின் அறங்காவலருமான ராமகோபாலன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘ஒவ்வொரு ஆண்டும் சாதி, இன பேதமின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வருகிறோம்.

இந்நிலையில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது உள்ளிட்டவைகள் குறித்து தமிழக பொதுத்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் புதிய நிபந்தனைகளை உருவாக்கியுள்ளனர். இதன்படி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறையினர், மின்சார வாரியம், போலீஸ் அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெறவேண்டும். முன்அனுமதி பெற வேண்டும்.

5 நாட்களுக்கு மேல் சிலைகளை வைத்திருக்கக் கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் எல்லாம் கடைசி நேரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

எனவே, அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையுடன் வேறு சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடைசி நேரத்தில் இப்படி புதிய விதிமுறைகளை அரசு பிறப்பித்தால், சிலை வைப்பவர்களால் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண், அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதி, “பழைய விதிகளின்கீழ் விநாயகர் சிலையை வைக்க அனுமதி கேட்கும் மனு தாரர்களின் கோரிக்கையை 48 மணி நேரத்தில் அரசு பரிசீலிக்க வேண்டும். பின்னர் எடுக்கப்பட்ட முடிவை வருகிற 4-ந்தேதி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். விசாரணையை 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News