லைஃப்ஸ்டைல்

ஏனிந்த சீரழிவு? காரணம் என்ன?

Published On 2019-05-13 03:14 GMT   |   Update On 2019-05-13 03:14 GMT
ஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது.
கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே ஒரு கேளிக்கை ஓய்விடத்தில் பல இளம் வயது ஆண்களும் சில பெண்களும் கூடி, குடித்து கூச்சலிட்டு கொண்டாட்டம் போட்டு, அக்கம் பக்கம் குடி இருப்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக புகார் வரவே, காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், அங்கிருந்த இளைஞர்கள் கஞ்சா, கோகைன் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு இருந்ததும், அதில் சிலர் அரை நிர்வாண நடனம் ஆடியதும் செய்தியாக வெளியானது.

இரண்டு நாட்களில் மற்றொரு அதிரடி சோதனை நடந்தது. இம்முறை மாமல்லபுரத்தில், அதே போல் இன்னொரு கேளிக்கை ஓய்வு விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் அவர்களுடன் ஏழு பெண்களும் போதையேறி சத்தம்போட்டு போலீசுக்கு புகார் சொல்வது போல நடந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒரு மண்டபத்தில் வைத்து விசாரித்து, எச்சரித்து அனுப்பியுள்ளார். பொள்ளாச்சியிலும் இது தான் நடந்துள்ளது.

இரண்டு கேளிக்கை இடங்களிலும் கூடி இருந்த இளைஞர்களின் வயது 18 முதல் 28 வயது வரை. பெரும்பாலானவர்கள் மாணவர்கள்; பலர் தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள். சிலர் தனியார் நிறுவனப் பணியாளர்கள். அவர்களின் வயது, எதிர்காலம் குடும்பம் ஆகியவற்றைக் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ள காவல்துறை அதிகாரிகள், அந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

இந்த செய்தியைப் படிக்கும்போது நமக்குக் கவலை ஏற்படுகிறது. தொலைக்காட்சியில் பார்க்கும் போது மனம் பதறுகிறது. வளரும் தலைமுறையின் ஒரு பகுதி இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை போக்கைத் தான் விரும்புகிறதா? இதில் பெண்கள் வேறு இவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்களே, இது எங்கு போய் விடும்? என்றெல்லாம் கேள்விகள் சங்கிலித் தொடராய் வந்து கொண்டே இருக்கின்றது. அந்தக் கேள்விகள் விடையற்றவையா? இல்லை. அதற்கு விடை இருக்கிறது.

இந்த நிலைக்கு என்ன காரணம்? இதை எப்படிச் சீர்படுத்துவது? என்ற இரண்டு கேள்விகளை ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டால், கொஞ்சம் தெளிவு பிறக்கும். அதற்கு முன்னால், நாம் சிந்திக்க வேண்டிய சில பிரச்சினைகள் உள்ளன. இந்த செய்திகளைப் படித்த, பார்த்த கொஞ்சம் உலகியல் அறிவுள்ள எவருக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது. இப்போது தான் முதல் முறையாக இப்படி ஒரு விருந்து நடைபெறுகிறதா? இது வரையில் எத்தனை நாட்கள் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்திருக்கும்? இப்படி இன்னும் எத்தனை ரிசாட்டுகள் உள்ளன. அவற்றில் எத்தனை ஆயிரம் ஆண்கள், பெண்கள் இப்படி விருந்துகளில் பங்கு பெற்று இருப்பார்களா? இது வரையில் ஏன் இவை காவல்துறையின் கவனத்திற்கு வரவில்லை? அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை? இவை அனைத்தும் அந்த சந்தேகத்தில் முளைக்கும் கிளைக் கேள்விகள்.

இதைப் பண்பாட்டுச் சீரழிவு என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் அதற்கு முன்னால் நமது பண்பாடு எது என்று புரிந்து கொள்வது அவசியம் அல்லவா? இதுவரையில் நம் நாட்டு ஆண்கள் கூடி குடித்து கும்மாளம் போட்டதே இல்லையா? “கிழக்குக் சீமையிலே“ என்ற திரைப் படத்தில் தென் தமிழ் நாட்டு மண்வாசனையை கிராமத்துப் புழுதி கிளம்ப அப்படியே திரையில் வரைந்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா. அந்த திரைப்படத்தில் கையில் சாராய பாட்டில் இல்லாத ஒரே ஆண், கதாநாயகியின் அண்ணன் மட்டுமே.

பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளை மாட்டு வண்டியிலேயே குடித்துக் கொண்டு வருகிறான். பெண் வீட்டின் பின்புற முற்றத்தில் உட்கார்ந்து குடிக்கிறான். அவனுக்குப் பெண் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. “மற்றபடி அவன் நல்லவன் தான்“. பிறகு கொங்கு நாட்டுப் பேச்சு மற்றும் பழக்க வழக்கத்துடன் “கிழக்கு வாசல்“ வந்தது. தோட்டத்திற்கு நடுவில் பண்ணை வீடு கட்டி அதில் ஒரு வைப்பாட்டியை வைத்து குடித்தனம் நடத்துபவர் தான் ஊர்ப் பெரிய மனிதர். இவை இரண்டும் எடுத்துக் காட்டுக்கு மட்டுமே.

இதைப் போல எத்தனையோப் படங்கள், எவ்வளவு அருவருப்பான காட்சிகள். ஆனால் அவையெல்லாம் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி விட்டன என்றோ யாரும் வருத்தப்படவில்லை. மாறாக அதை ஒரு பெருமையுடன் அங்கீகரித்தார்கள். அந்தப் பின்னணியில் இருந்து வரும் ஆண்கள் கல்லூரிக்குச் சென்ற பிறகு, படிக்காமல், குடிகாரனாக வலம் வந்தாலும் கூட, குடித்து உடலை கெடுத்துக் கொள்கிறான் என்று தான் கவலைப் பட்டார்களே தவிர அது நம் குலத்தின் பெருமைக்கு அடுக்குமா என்று கேட்டதில்லை. கறி விருந்து வைத்து போதையில் கட்டிப் புரண்ட காட்சிகளை தமது பெருமையாக நினைத்த ஆணாதிக்க மனக் கோளாறு, கேளிக்கை விடுதியில் கூடிக் கும்மாளம் போடும் கூட்டத்தைத் தானே உருவாக்கும். அதனால் ஏதோ மேல் நாட்டில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் சிப். புளூடூத் மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு என்று கட்டமைப்பது தவறு.

இன்று எந்த நாட்டிலும் நமது இளைஞர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம்? இந்த ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்ப பன்னாட்டு கம்பெனிகள் தான். ஆனால் இந்த நிறுவனங்களின் சுயநலக் கட்டமைப்பு, இவர்கள் இப்படிக் கூடிக் களிப்பதை தங்கள் அலுவலகத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகளில் ஒன்றாகவே வைத்திருக்கிறது. அவர்கள் நம் இளைஞர்களை ரத்தம் சுண்ட, மூளை வறண்டு போகும் அளவுக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பல மணி நேரங்கள் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் முப்பத்தைந்து வயதிற்குள் தலையில் வழுக்கையோ, சொட்டையோ விழும் அளவிற்கு சத்திழந்து போகிறார்கள். தூங்குவதென்றால் மரக் கட்டைகளைப் போல் மணிக்கணக்காய்க் கிடப்பார்கள். தூங்கி எழுந்த பின் பார்த்தால் முன்னை விட களைப்பாகத் தெரிவார்கள். இவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவற்காக அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கியது தான் இந்த பார்ட்டி கல்ச்சர். இது எந்த வகையில் அவர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்? மேலும் அவர்களை பலவீனமாகத் தான் ஆக்கும்.

இவர்களை இதிலிருந்து மீட்பதற்கு நமது அரசும், குடும்பங்களும் என்ன முயற்சி செய்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச வேலை நேரம் குறித்த எந்த சட்டமும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்லாது. வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. எட்டு ஆண்டு கடின வேலை செய்த ஒருவரை இரண்டே “ரிவ்யூ மீட்டிங்“ வைத்து வேலையை விட்டு நீக்கிவிடலாம். கேள்வி முறை இல்லை. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, இந்த சட்டங்கள் ஒழுங்குபடுத்த இந்திய அரசு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. ஒரு வேளை ஏதாவது எழுத்தில் இருந்தாலும் அதை நிறைவேற்ற முயல்வதில்லை.

சரி இவர்களது குடும்பத்தைப் பாருங்கள். பெற்றோராகிய நாம் என் மகனோ, மகளோ அமெரிக்க டாலர் கணக்கில் ரூ.70 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டாம். ஏழு, எட்டு மணி நேரம், வேறு கம்பெனியில் நிம்மதியாக வேலை செய்து 20 ஆயிரம் வாங்கினால் போதும் என்று நினைக்கிறோமோ? இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு பயந்து, அவர்களின் பிள்ளைகளுக்கு ஆயா வேலை பார்க்க வயதான காலத்தில் ஒன்றாக இருக்க முடியாமல் அப்பா ஆறு மாதம், அம்மா ஆறு மாதம் அமெரிக்காவில் பேரக் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள் என்கிறோம். அப்பாவும் அம்மாவும் இப்படிப் பிரிந்திருக்கலாமா என்று பிள்ளைகள் நினைப்பதில்லை.

இந்த வலைப் பின்னலை உருவாக்கிய அந்த பணம் எனும் சிலந்தி தான் தன் இரையாக இந்த இளைஞர் கூட்டத்தை வளைத்துப் போடுகிறது. இதில் பெண்களும் இருப்பது அவர்களுக்குக் கூடுதலான ஆபத்துகளை உருவாக்கும் என்பதால் அவர்களை அதிகமாக எச்சரிக்க வேண்டியிருக்கிறது.

மற்றபடி பெண்கள் இப்படி போனால். ஆண்கள் வீடியோ எடுக்கத் தான் செய்வார்கள் என்று பேசுகிறவர்கள். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால், எங்கோ நடந்து போகிற பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் விட்டு அவள் தான் விரும்பி வந்தாள் என்று சொல்லும் குற்றவாளிகளை உருவாக்குவதற்கு தான் நீங்கள் துணை போகிறீர்கள்.

ஏனெனில் எந்தச் சீரழிவும் தனியே நிலவில் இருந்து புவியில் குதிப்பதில்லை. சமூகத்தின் போலிச் சிந்தனையில் தான் குற்றம் நடக்கிறது. அதைத் திருத்தும் சிந்தனையில் தான் அறமும் பிறக்கிறது. ஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது. அதுதான் இத்தகைய சீரழிவுகளின் ஊற்றுக் கண்ணை மூடும். அறம் செய்ய விரும்பும் மனநிலையை ஏற்படுத்தும்.

அ.அருள்மொழி, வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.
Tags:    

Similar News