லைஃப்ஸ்டைல்

வாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்...

Published On 2019-05-02 03:09 GMT   |   Update On 2019-05-02 03:09 GMT
துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும்.
கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் காலம்தான் வாழ்க்கை. பாடம் கற்றுக்கொடுத்து விட்டு தேர்வு வைப்பதில்லை வாழ்க்கை, தேர்வு வைத்து விட்டு பாடம் கற்றுத்தருவதுதான் வாழ்க்கை. அது சொல்லிக் கொடுக்கும் பாடத்தை வேறு யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. வாழ்க்கை என்பது அகன்று விரிந்து ஆழம் கொண்டிருக்கும் கடல் போன்றது.

ஒவ்வொருவரும் அதன் கரையில் நின்று அதன் ஆழ, அகலங்களை அளவிட்டு விடலாம் என எண்ணுகின்றனர். சிலர் அதை அளவிட முடியாது என்று விலகி விடுகின்றனர். சிலர் தாங்கள் அளந்த சின்னச் சின்ன விஷயங்களை உண்மை என உலகிற்கு உரைக்கின்றனர். அப்படி அவர்கள் சொன்ன சில தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்துத்தான் நாம் இன்று வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். இன்னொருவர் கொடுத்த விளக்கத்தை வைத்து வாழ்க்கைக்கான அர்த்தத்தைத்தேட முயன்றால் உண்மையான அர்த்தத்தை உணர முடியாது.

வாழ்தல் என்ற சொல் நுட்பமான பொருள் பொதிந்தது. ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதினாலேயே அவர் வாழ்கிறார் என்று சொல்லி விட முடியாது. உயிரோடு இருப்பது வேறு. உயிர்ப்போடு இருப்பது வேறு. நேற்று இருந்ததை விட இன்று ஒரு படி உயர்தல் என்பதே வாழும் நிலை. வளர்வதுதான் வாழ்வு. வளர்வது என்பது பொருளாதார உயர்வை மட்டும் குறிப்பது இல்லை. மனதளவில் ஆன்ம மேம்பாட்டில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டிருப்பதுதான் உண்மையான வாழ்வாகும்.

இருத்தலுக்கும் வாழ்தலுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கைதி சிறையில் இருந்து விடுதலையாகி வருகிறான். அவனிடம் “இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்” என்று கேட்டால், “சிறையில் வாழ்ந்தேன்” என்று சொல்லமாட்டான், இருந்தேன் என்றே சொல்லுவான். சிறையில் அவன் விருப்பப்பட்டு மனத் திருப்தியுடன் வாழ மாட்டான். அதனால்தான் அவன் வாழ்ந்தேன் என்று சொல்லாமல் இருந்தேன் என்று சொல்கிறான். வாழ்க்கை பிறரை சார்ந்து அமையக் கூடாது. நம் வாழ்க்கை ஓடத்தின் திசையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். துடுப்பை நாம் அசைத்தாலும், அசைக்காவிட்டாலும் ஓடத்தின் திசை நம் தீர்மானமாகவே இருக்க வேண்டும்.

மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகே வாழ்க்கை ஆரம்பமாகும் என்று கற்பனை செய்கிறார்கள். படித்தவர்கள் ஒரு வேலை கிடைத்தால் போதும் அதன் பிறகு வாழ்க்கை வசப்படும் என்கிறார்கள். வேலைக்குச் செல்கிறவர்கள் நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்து விட்டால் வாழ்க்கை அமைந்து விடும் எனக் கனவு காண்கிறார்கள். பிறகு அடிப்படைத்தேவை அனைத்தையும் பெற்று விட்டால் போதும், அப்போதே என் வாழ்க்கை ஆரம்பமாகி விடும் என்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லை. வாழ்க்கையின் தொடக்கத்தை ஒத்திப்போட்டு, ஒத்திப்போட்டு வாழ்க்கைக்கு பதில் மரணத்தையே சந்திக்கிறார்கள்

மரணத்தின் போது கூட ஏமாற்றத்தை மறைக்க மறு பிறப்பில் வாழ்வோம் என்று முணுமுணுக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை எப்போதோ ஆரம்பமாகிவிட்ட ஒன்று. நம் அனுமதியின்றியே நம் வாழ்க்கை தொடங்கி விட்டது. இனிமேல் தான் ஆரம்பம் என்று ஒத்திப்போடுவது வேடிக்கையான வினோதம். நாடகத்திற்கு ஒத்திகை உண்டு. ஆனால், வாழ்க்கைக்கு ஒத்திகையே கிடையாது. ஒத்திகை இல்லாத, இடைவெளி இல்லாத, நிறுத்த முடியாத நாடகம்தான் வாழ்க்கை.

வாழ்க்கை புறப்பொருள் சார்ந்து உருவாக்கப்படும் சித்தாந்தங்களில் இல்லை. அகத்தைச் சார்ந்து உருவாக்கப்படும் அரை குறை வேதாந்தங்களிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒவ்வொரு சம்பவத்திலும் இருக்கிறது. பொருள் சார்ந்து இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் பொருள் ஈட்டித்தான் ஆக வேண்டும். நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாவிட்டால் வாழ்தலை பற்றி சிந்திக்கவே முடியாது. ஆனால் செல்வம் ஈட்டுவதிலேயே எந்திரத்தனமாக மாறி, முழு வாழ்க்கையையும் தொலைத்து விடக்கூடாது. போட்டி நிறைந்த உலகில் ஓடித்தான் ஆக வேண்டும். குரோதம், பொறாமை போன்ற எண்ணங்கள் அற்றதாய் நம் மனதை ஆக்கிக்கொண்டு அந்த ஓட்டத்தையும் ஒரு அனுபவமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

எந்த வாழ்க்கையைப் பெறுவதற்காக நாம் பணத்தை தேடி மனைவி, குழந்தைகளை புறக்கணித்து ஓடுகிறோமோ அந்த வாழ்க்கையை விட்டே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் பெரும் புள்ளியாகும்போது, வாழ்க்கை நமக்கு வெகு தூரத்தில் சிறு புள்ளியாக மறைந்து கொண்டிருக்கும். ஒருபோதும் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, பணத்தை தேடக்கூடாது.

வாழ்க்கை நாம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளையக்கூடியது அல்ல. இந்த உலகில் நாம் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. வாழ்க்கை நம்மை எந்த திசைக்கும் இழுத்துச் செல்லலாம். நம் தலையில் எந்த சுமையையும் சுமத்தலாம். அவற்றை நாம் நிராகரிக்க முடியாது. நமக்கென்று ஏற்பட்டிருக்கும் பொறுப்புகளைக் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி.

கையில் கிடைத்ததை மட்டமாக எண்ணி கிடைக்காததை உயர்வு என கற்பனை செய்யும் மனமுடையவராக நாம் இருந்தால், நம் வாழ்க்கை நரகம்தான். நாம் உண்மையிலேயே பெரிய நரகத்தில் மாட்டி கொண்டாலும் அதையும் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். நம் மன நிலையை பொறுத்துத்தான் சொர்க்கத்திலும் நரகத்தைக் காண முடியும். நரகத்திலும் சொர்க்கத்தைத் தரிசிக்க முடியும்.

வறட்டு கவுரவமும் அவசியமற்ற தன்மான உணர்வும் கொண்டிருந்தால் வாழ்க்கை இனிக்காது. கல்வி, அறிவைப் பெருக்குவதற்கும், சிந்தனையை வளர்ப்பதற்கும்தான். எல்லோரும் படிப்புக்கேற்ற பணியில் அமர்ந்து விட முடியாது. எந்த செயலைச் செய்து கொண்டிருக்கிறோமே அந்த செயலை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு நம் படிப்பின் மூலம் நாம் பெற்றிருக்கும் சிந்தனைத் திறனை செலவிட வேண்டும்

மனைவியை அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியாது, ஆனால் மனைவி குறித்த நம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளலாம். வேலையை அடிக்கடி மாற்ற முடியாது. ஆனால், வேலை பற்றிய சிந்தனையை மாற்றிக் கொள்ள முடியும். உலகத்தை மாற்றி விட முடியாது. ஆனால், உலகம் பற்றிய நம் கவலையை மாற்றி விடலாம். இன்பமோ, துன்பமோ வெளியிலே இல்லை. நமக்குள்தான் இருக்கிறது.

துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும். மிதிப்பவர்களிடம் வாழ்ந்து பேச வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி. கவலையே வாழ்க்கையின் எதிரி. வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழக்கூடாது. நம் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும். சகித்து கொண்டு வாழாமல் ரசித்துக் கொண்டு வாழ வேண்டும். வழியின்றி வனத்தில் நடக்கலாம். ஆனால் வலியில்லாமல் வாழ்க்கை நடக்காது. ஒவ்வொரு மனிதனும் தானும் துன்பப்படாமல், பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழ்வதுதான் வாழ்க்கை எனும் ஓடம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.

மகா. பாலசுப்பிரமணியன், துணைப்பதிவாளர்,

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
Tags:    

Similar News